சென்னை:  இன்று சென்னை  உள்பட 4 மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு  உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வங்க கடலில் அடுத்தடுத்து உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சமீபத்தில் பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. ஆனால் இது புயலாக மாறுவதற்கு குறைவான வாய்ப்புகளே உள்ளதாக கூறப்பட்டது.

 தொடர்ந்து தென்மேற்கு பகுதியில் நகர்ந்து வந்த இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. தற்போது வானிலை ஆய்வு மைய கணிப்பின்படி, இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்திற்குள் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்ந்து மேற்கு – தென்மேற்கு நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன்  காரணமாக, தென்தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் நேற்று லேசான மழை பொழிவு காணப்பட்டது. மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் இன்று நிலவும். இதன்காரணமாக, இன்று தமிழகத்தின் வடகடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், மற்ற பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு உள்ளது.