சென்னை: மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் எல்.கே சுதீஷ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அதுபோல பசுமை வழிச்சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தும் அழைப்பு விடுத்தனர்.

விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் எல்.கே சுதீஷ் உள்ளிட்டோர் தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்தனர். அப்போது,  மறைந்த விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த பல ஆண்டுகளாக  உடல் நலக் குறைவால்  சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி காலமானார்.  அவருடைய முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் 28ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி, பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு தேமுதிக தலைவரும், அவரது மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் ஏற்பாடு செய்துள்ளார். மேலும்,  இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும்படி, அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் எல்.கே சுதீஷ்  சென்னையில் உள்ள  தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , ‘தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று (23.12.2024) காலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் தே.மு.தி.க கட்சியின் துணை பொதுச்செயலாளர்கள் எல்.கே. சுதீஷ், பார்த்தசாரதி, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், இளைஞரணி செயலாளர் நல்லதம்பி ஆகியோர் நேரில் சந்தித்து, மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 28ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளதையொட்டி, அந்நினைவு தின நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.

அப்போது, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள செவந்தி இல்லத்தில்  அதிமுக கழகப் பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமியையும்,  புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு குருபூஜை விழாவிற்கு வருகை தருமாறு அதற்கான அழைப்பு விடுத்தார். அவருடன்,  தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாநில துணைச் பொதுச் செயலாளர் எல்.கே. சுதிஷ், மாநில துணைச் பொதுச்செயலாளர்  ப. பார்த்தசாரதி, கே. நல்லதம்பி  ஆகியோர் உடனிருந்தனர்.