சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயிலில் தினசரி 3 லட்சம் பேர் முதல் 4 லட்சம் பேர் வரை பயணித்து வருகின்றனர். இந்த நிலையில், சமீப காலமாக அவ்வப்போது மெட்ரோ ரயில் சேவையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அதை நம்பி வரும் பயணிகள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்கள், விமான நிலையங்களை இணைக்கும் மெட்ரோ ரயில்கள் பயணிகளுக்கு பெரும் உதவியாக உள்ளது. தகுந்த நேரத்தில் பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்களை பிடிக்க மெட்ரோ ரயிலை பயணிகள் பெரிதும் நம்புகின்றனர். ஆனால், இந்த சேவையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இன்று காலை முதல் மெட்ரோ ரயில் சேவையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதம் ஆகி வருவதாக தெரியவந்துள்ளது. இதனால், விமான நிலையம், பேருந்து நிலையம், மற்றும் ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து,  விமான நிலையம் – விம்கோ நகர் வழித்தடத்தில் 18 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ இயக்கப்படுவதாகவும்,  டோல்கேட் – விம்கோ நகர் டிப்போ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,  சென்ட்ரல் – விமான நிலைய வழித்தடத்தில் 7 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு வழக்கம் போல் ரயில்கள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.