சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு எடுக்கப்பட்ட நிலத்தில் 499.85 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து நிலம் கிடைத்த மக்கள் முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நில எடுப்பிலிருந்து சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 499.85 ஏக்கர் நிலங்கள் விடுவிப்பு – நீண்ட கால பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அளித்ததற்காக பயனாளிகள் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (23.12.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்த அறிவிக்கை செய்யப்பட்ட நிலங்களில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 499.85 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்களித்து ஆணை வழங்கி, தங்களது நீண்ட கால பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அளித்ததற்காக 10 பயனாளிகள் சந்தித்து, தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் 4(1) Notice கொடுக்கப்பட்ட நிலங்கள், கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்ட நிலங்கள் ஆகியவற்றிற்கு நீண்ட காலமாக பொதுமக்கள் தடையின்மை சான்று கோரியும், நில எடுப்பிலிருந்து விலக்களிக்கக் கோரியும் அரசிடம் மனுக்கள் அளித்து வந்தனர்.
பொதுமக்களின் இக்கோரிக்கை தொடர்பாக முதல்வரின் முன்னெடுப்புத் திட்டத்தின் கீழ் தீர்வு காணும் பொருட்டு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் ஆணையம் மூலம் நில நிர்வாக ஆணையர் தலைமையில் சிறப்புக் குழு அமைத்து 10.10.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. குழுவின் கவனமான பரிசீலனைக்குப் பிறகு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்த அறிவிக்கை செய்யப்பட்ட நிலங்களில் முதற்கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் 2002.21 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்களித்து ஆணை வழங்கப்பட்டு, தங்களது நீண்ட கால பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு அளித்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை 4.10.2024 அன்று பயனாளிகள் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
அதன் அடுத்த கட்டமாக சிறப்புக் குழு சென்னை மாவட்டத்தில் உள்ள சில இடங்களில் கூட்டு ஆய்வு மேற்கொண்டு அளித்த அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கொரட்டூர், கொட்டிவாக்கம், விருகம்பாக்கம், நெசப்பாக்கம், போரூர், நெற்குன்றம், முகப்பேர், அம்பத்தூர், நொளம்பூர் ஆகிய இடங்களில் உள்ள 499.85 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்களித்து ஆணையிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டு, சிறப்புக் குழு பரிந்துரையின்படி நில எடுப்பிலிருந்து விலக்களித்து ஆணை பெற்ற சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 10 பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இன்றையதினம் சந்தித்து தங்களது நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு கண்டதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி காகர்லா உஷா, இ.ஆ.ப., தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ்.முருகன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.