டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பாஜக எம்.பி. காயம் அடைந்த விவகாரத்தில், அவர்மீது மற்றோரு எம்.பி.யை தள்ளிவிட்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவர்  ராகுல் காந்தி மீது 5 பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே காங்கிரஸ் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ள நிலையில், பாஜக தரப்பிலும் புகார் கூறப்பட்டுள்ளது.

அம்பேத்கர் விவகாரத்தில், நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணிஎம்.பி.க்களும், பாஜக எம்.பி.க்களுக்கும் தர்ணா மற்றும் பேரணி நடத்தினர். ஒரு கடத்தில் இரு தரப்பினரும்  நாடாளுன்ற கட்டித்திற்குள் செல்ல முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில்,  பாஜக எம்பிக்கள் பிரதாப் சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோர் காயமடைந்தனர். ராகுல்காந்திதான் மற்றொருவரை தன்மீது தள்ளி விட்டார் என  பாஜக எம்பிக்கள் பிரதாப் சாரங்கி நேரடியாக குற்றம் சாட்டினார்.

அதாவது,  நாடாளு மன்றத்துக்குள் நுழைய முயன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பாஜக எம்.பி.க்கள் தடுத்ததாகவு,  அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, ஒடிசாவை சேர்ந்த பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி (69), உத்தரபிரதேச பாஜக எம்.பி. முகேஷ் ராஜ்புத் ஆகியோர் கீழே விழுந்து காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறையிடம் பாஜக தரப்பில் புகார் தெரிவித்துள்ளது. அதன்பேரில்,  மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது 5 பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதுபோல, நாடாளுமன்றம் உள்ளே செல்ல முயன்ற ராகுல்காந்தியை பாஜக எம்.பி.க்கள் தாக்கினர் என காங்கிரஸ் தரப்பிலும் டெல்லி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் குறித்து கூறிய பாஜக எம்.பி. கிரிராஜ் சிங் , ‘‘அவையில் அராஜகத்தை பரப்ப ராகுல் காந்தி விரும்புகிறார். சாரங்கிக்கு நடந்த சம்பவம் கண்டனத்துக்குரியது. அவர் தள்ளிவிடப்பட்டார். இதனால் மயங்கி விழுந்தார். இந்த செயல் போக்கிரித்தனமானது’’ என்றார்.

பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கூறும்போது, ‘‘வயதான எம்.பி.யை ராகுல் காந்தி தள்ளிவிட்டுள்ளார். ரவுடிகள் போல சிலர் நடந்துகொள்வது தலைகுனிவை ஏற்படுத்துகிறது’’ என்றார்.

காயமடைந்த சாரங்கி, ராஜ்புத் ஆகியோரிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பிரகலாத் ஜோஷி ஆகியோர் சாரங்கியை மருத்துவமனையில் சந்தித்தனர்.

காவல் நிலையத்தில் இரு தரப்பும்  புகார்:

நாடாளுமன்ற நுழைவுவாயிலில் தே.ஜ கூட்டணி எம்.பி.க்கள் – இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் இடையே நேற்று நடைபெற்ற தள்ளுமுள்ளு சம்பவத்தில் பாஜக எம்.பி.க்கள் 2 பேர் காயமடைந்ததாக நாடாளுமன்ற சாலையில் உள்ள காவல் நிலையத்தில் பாஜக எம்.பிக்கள் அனுராக் தாக்கூர், பன்சூரி சுவராஜ் ஆகியோர் புகார் கொடுத்தனர். அவர்களுடன் தெலுங்கு தேசம் எம்.பி. ஒருவரும் சென்றார்.

பின்னர், அதே காவல் நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் திக்விஜய் சிங், முகுல் வாஸ்னிக், ராஜீவ் சுக்லா மற்றும் பிரமோத் திவாரி ஆகியோர் ஒரு புகார் கொடுத்தனர். அதில், ‘காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் (84), பாஜக எம்.பி.க்கள் அத்துமீறி நடந்து அவரை தள்ளிவிட்டனர்’ என்று கூறியிருந்தனர். இந்த 2 புகார்களையும் ஆய்வு செய்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் புகார் கொடுத்தனர். அதில், ‘நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் ராகுல் காந்தியை பாஜக எம்.பி.க்கள் தடுத்தனர்’ என்று கூறியுள்ளனர். சபாநாயகருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அனுப்பிய கடிதத்தில், ‘என்னை பாஜக எம்.பி.க்கள் தள்ளிவிட்டதால், நிலைதடுமாறி கீழே அமர்ந்தேன். ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட எனது கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார்.