அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அவதூறாக பேசியதை அடுத்து இந்த விவகாரம் சர்ச்சையானது.

அமித் ஷா மன்னிப்பு கேட்கவேண்டும் அல்லது அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கவேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

இதுதொடர்பாக நாடு முழுவதும் ஆர்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே இந்தியா கூட்டணி கட்சியினர் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் அம்பேத்கர் சிலையில் இருந்து நாடாளுமன்ற வாயில் வரை கோஷமெழுப்பியபடி சென்றனர்.

அப்போது அந்த வாயிலை மறித்து காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக கோஷம் எழுப்பி நின்ற பாஜக எம்.பி.க்கள் அடங்கிய குழு நாடாளுமன்ற நுழைவாயில் முன் நின்று காங்கிரஸ் எம்.பி.க்களை உள்ளே நுழையவிடாமல் தடுத்தனர்.

கோஷம் எழுப்பியபடியே காங்கிரஸ் எம்.பி.க்கள் முன்னேற முயற்சி செய்ததை அடுத்து அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் எதிர்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியை பாஜக எம்.பி.க்கள் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.

தவிர இந்த களேபரத்தில் பாஜக எம்.பி.க்கள் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் சார்பில் அனுப்பியுள்ள கடிதத்தில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் உடல் ரீதியாக தாக்கப்பட்டார் இது எதிர்க்கட்சித் தலைவர் மீதான உரிமைகளை மீறிய செயல் இதில் ஈடுபட்ட ஆளும் கட்சியைச் சேர்ந்த 3 எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

அதேவேளையில் எதிர்க்கட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக பாஜக எம்.பி.க்கள் மூன்று பேர் மீது டெல்லி பாராளுமன்ற வீதி காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் புகார் அளித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சம்பவத்தை அடுத்து அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய பேச்சு தற்போது வேறு திசையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.