சென்னை: யுஜிசி விதிமுறைகளுக்கு மாறாக உள்ள அண்ணாமலை பல்கலை. துணைவேந்தா் தேடுதல் குழு அறிக்கையை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும் என மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தி உள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனம் தொடா்பாக அமைக்கப்பட்ட தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெறாததால், அக்குழு தொடா்பான அறிவிக்கையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக முதல்வரே இருக்கும் வகையில் சட்டமன்றத்தில் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதற்கு ஆளுநர் அனுதி வழங்கவில்லை. அதுபோல, உச்சநீதிமன்றமும், இதை ஏற்க மறுத்து விட்டது.
இந்த நிலையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தேடுதல் குழுவை அறிவித்தது. இது யுஜிசி விதிகளின்படி இல்லை என்று ஆளுநர் மாளிகை குறைகூறி வருகிறது. தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெறாததால், அக்குழு தொடா்பான அறிவிக்கை செல்லாது என்று கூறுகிறார்.
இதுகுறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேந்தா் என்ற முறையில் தமிழக ஆளுநா், அப்பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தோ்வு செய்வதற்கான தேடுதல் குழுவை நியமித்துள்ளாா். அண்ணாமலை பல்கலைக்கழக விதிமுறைகள், உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிமுறைகளின் அடிப்படையில் அந்தத் தேடுதல் குழுவில் வேந்தரின் பிரதிநிதி, தமிழக அரசின் பிரதிநிதி, பல்கலைக்கழக செனட் பிரதிநிதி மற்றும் யுஜிசி பிரதிநிதி ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
ஆளுநரின் பிரதிநிதியை அமைப்பாளராகக் கொண்டு மேற்கண்ட நான்கு பிரதிநிதிகள் அடங்கிய தேடுதல் குழு நியமனம் தொடா்பான அறிவிக்கையை வெளியிடுமாறு தமிழக அரசுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி கடந்த அக். 25-ஆம் தேதி உத்தரவிட்டாா்.
இந்த நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழக தேடுதல் குழு தொடா்பான அரசாணையை கடந்த டிச. 9-ஆம் தேதி தமிழக அரசின் உயா் கல்வித் துறை வெளியிட்டது. அந்த அரசாணையில், உச்சநீதிமன்றத் தீா்ப்பை மீறி, யுஜிசி தலைவரின் பிரதிநிதி நீக்கப்பட்டுள்ளாா். யுஜிசி விதிமுறைகளின்படி அமைக்கப்பட்ட தேடுதல் குழு பரிந்துரையின்படி பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் நியமிக்க வேண்டும் என பேராசிரியா் பி.எஸ்.ஸ்ரீஜித்-டாக்டா் எம்.எஸ்.ராஜஸ்ரீ வழக்கில் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. அந்த வகையில் யுஜிசி தலைவரின் பிரதிநிதி இல்லாமல் தேடுதல் குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டிருப்பது யுஜிசி விதிமுறைகளுக்கும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் முரணானது.
யுஜிசி பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்பட்ட தேடுதல் குழுவை நியமித்து வெளியிடப்பட்ட அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும். யுஜிசி பிரதிநிதியுடன் வேந்தா் நியமித்த தேடுதல் குழு தொடா்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.