தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் பதவிநீக்க தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறியது.
தென் கொரியாவில் கடந்த டிசம்பர் 3ம் தேதி அவசரநிலை ராணுவச் சட்டத்தைக் கொண்டுவந்து பின்னா் திரும்பப் பெறப்பட்டது.
இதையடுத்து அதிபா் யூன் சுக் இயோலை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை எதிா்கட்சியான ஜனநாயகக் கட்சி மற்றும் ஐந்து சிறிய கட்சிகள் இணைந்து அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
நாடாளுமன்றத்தில் அதிபா் மீதான பதவிநீக்கத் தீா்மானம் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினா்கள் ஆதரவு தெரிவிக்கவேண்டும்.
300 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 173 உறுப்பினர்களும் சிறிய கட்சிகளுக்கு 19 உறுப்பினா்களும் உள்ளனா்.
மேலும், 8 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில் யூன் சுக் இயோலுக்கு எதிரான பதவிநீக்கத் தீா்மானம் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் இன்று வெற்றிபெற்றது.
இதையடுத்து இந்த தீர்மானத்தின் நகல் யூன் சுக்-யோல் மற்றும் நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும்.
அதனைத் தொடா்ந்து, அரசியல் சாசன நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகளில் ஆறு அல்லது அதற்கு மேற்பட்டவா்கள் ஒப்புதல் அளித்தால் அதிபா் யூன் சுக் இயோல் பதவியிலிருந்து அகற்றப்படுவாா் இதுகுறித்து 180 நாட்களுக்குள் நீதிமன்றம் முடிவு செய்யும்.
ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டால், அடுத்த 60 நாட்களுக்குள் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அதிபருக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதை அடுத்து அதிபர் யூன் சுக்-யோல் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் முக்கிய முடிவுகளை பிரதமர் ஹான் டக் சூ மேற்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.