தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து செயற்கை நுண்ணறிவுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க, கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார்.

அங்கு, கூகுள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை மவுண்டன் வியூ வளாகத்தில் முதலமைச்சர் சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பிக்சல் 8 போன்கள் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும், கூகுள் நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை தமிழ்நாட்டில் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தவிர, 20 லட்சம் இளைஞர்களுக்கு AI தொழில்நுட்பத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிலையில் வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, இளைஞர்களுக்கு AI தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க தமிழக அரசுக்கும் கூகுள் நிறுவனத்துக்கும் இடையேயான இறுதி ஒப்பந்தம் நேற்று அமெரிக்காவில் கையெழுத்தானதாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து 20 லட்சம் இளைஞர்களுக்கு AI தொழில்நுட்பத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.