அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ஜனவரி 20 ஆம் தேதி தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பல்வேறு வெளிநாட்டு பிரமுகர்களை அழைக்க டிரம்ப் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் தயாராகி வருகிறன்றனர்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை உயர்த்தப்போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ள்ளார். அதேவேளையில் டிரம்பின் பதவியேற்புக்கு முந்தைய நாளான ஜனவரி 19ம் தேதி TikTok செயலியை தடை செய்யவேண்டும் என்றும் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை எதிர்த்து டிக்டோக்கின் சீன தாய் நிறுவனமான பைட் டான்ஸ் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க தேர்தல் முடிந்தவுடன் நவம்பர் தொடக்கத்திலேயே ஜி ஜின்பிங்கை தனது பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு டிரம்ப் அழைத்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் இந்த அழைப்பை சீன அதிபர் ஏற்றுக்கொண்டாரா என்பது குறித்து இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. தவிர, இதுகுறித்து சீன தூதரக அதிகாரிகளும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீன அதிபர் தவிர, கடந்த வாரம் டிரம்ப்பை அவரது மார்-ஏ-லாகோ கிளப்பில் சந்தித்த அவரது நண்பரும் ஹங்கேரிய பிரதமருமான விக்டர் ஆர்பன்னுக்கும் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.