சென்னை: ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி, அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில், திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன் என குறிப்பிட்டு உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்துக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு வயது 74 ஆகிறது. இருந்தாலும், அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த 1975ஆம் ஆண்டில், மறைந்த இயக்குனர் பாலசந்தரால் திரையுலகில் அறிமுகம் செய்யப்பட்டார். ‘அபூர்வ ராகங்கள்’ எனும் திரைப்படத்தில், சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமான ஒரு நடிகர், பிறகு வில்லன், கதாநாயகன், ‘சூப்பர் ஸ்டார்’, என பரிணாமங்கள் எடுத்து, 2023இல் ‘ஜெயிலர்’ எனும் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த ஒரு திரைப்படத்தைக் கொடுத்து, இன்றும் ‘சோலோ ஹீரோவாக’ (Solo hero) நிலைத்து நிற்கிறார்.
இன்று அவர் தன் 74வது பிறந்த நாளை (டிச. 12) கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர், ஆன்மிகவாதிகள், ரசிகர்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அருமை நண்பர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தனது எஸ்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார். அதில், எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் – ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன் என கூறியுள்ளார்.