சியோல்

தென் கொரிய ராணுவ அமைச்சர் தற்கொலை முயற்சி நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 3 ஆம் தேதி தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதற்கு மக்களின் கடும் எதிர்ப்பால் அவசர நிலையை வாபஸ் பெற்றார். அவசர நிலையை அறிவிக்க தூண்டுதலாக இருந்ததாகவும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் ராணுவ அமைச்சர் கிம் யாங் ஹியூன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் சியோலில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். விசாரணையின் போது கழிவறைக்கு சென்ற அவர் தனது ஆடையை கிழித்து தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தென்கொரியா அதிபர் அலுவலகத்தில் போலீசார் புகுந்து ரெய்டு நடத்தி தலைமறைவாக உள்ள தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோலை கைது செய்ய முக்கிய ஆவணங்கள் திரட்டப்பட்டு வருவதால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.