சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள  மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் அரசு மதுபான கடைகளில், அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள்மீது தாக்குதல்களும் நடைபெற்று வருகின்றன.

இதுதொடர்பாக வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம். அதிக விலைக்கு, மதுவை விற்பனை செய்ததற்காக, டாஸ்மாக் நிறுவனம்,  மனுதாரருக்கு ரூ.60 ஆயிரம்  இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது குடிமக்கள் மத்தியில்,  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர்  டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அதிக விலைக்கு மது விற்பனை நடைபெறுவதாக நிர்வகத்திடம் முறையிட்டிருந்தார். ஆனால், டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் இந்த விஷயத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்டு, அவர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு அளித்தார்.

அவரது மனுவில்,, “கடந்த 2021ம் ஆண்டு பெரம்பூரில் உள்ள டாஸ்மாக்கில் ரூ.180க்கு விற்க வேண்டிய மதுபாட்டில் ரூ.20 கூடுதலாக ரூ.200க்கு விற்கப்பட்டது. இதேபோல வியாசர்பாடி, கொடுங்கையூர், ஓட்டேரி, குமரன் நகர், பெரவள்ளூர், கொளத்தூர், கொசப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 10 டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையைவிட மது வகை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து டாஸ்மாக் மேலாளரிடம் புகார் அளித்தும் அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் கோபிநாத் மற்றும் உறுப்பினர்கள் கவிதா கண்ணன், ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இதற்கு டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும்,  ” மனுதாரர் டாஸ்மாக் நிறுவனத்துக்கு எதிராக தேவையற்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். டாஸ்மாக் நிறுவனம் யாரையும் மது அருந்த வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை என்றும்,

மது அருந்தாதவர்களை குடிகாரர்களாக்கி ரூ.5,000 கோடி வருமானம் ஈட்டுவதாக கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை.

மதுக்கடைகளில் விலைப்பட்டியல் மற்றும் மதுவை வாங்கும்போது ரசீதுகளும் வழங்கப்படுகிறது. டாஸ்மாக் நிறுவனத்தின் மீது களங்கம் ஏற்படுத்தும் விதமாக பல கடைகளில் ரூ.10 முதல் 70 வரை அதிக விலை கொடுத்து மனுதாரரே மதுவை வாங்கியுள்ளார்.

மதுவை வாங்கியவர் உடனடியாக புகார் அளிக்காமல் 1 வருடத்திற்கு பின் புகார் அளித்துள்ளார்” என்று டாஸ்மாக் நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த   சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,, டாஸ்மாக்கில் மதுவை வாங்க, மதுவை அருந்துபவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால், கூடுதலாக வசூலித்த தொகையையும் சேர்த்து, கடைக்கு ரூ.5 ஆயிரம் வீதம் 10 கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும், வழக்கு செலவாக ரூ.1000 வீதம் ரூ.10,000 சேர்த்து ரூ.60,330-ஐ 2 மாதங்களில் மனுதாரருக்கு டாஸ்மாக் நிறுவனம் வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.