சென்னை: தாம்பரம் அடுத்த முடிச்சூர் புறநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சென்னையில், வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்கா செயல்பட்டு வந்த கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூடிய தமிழ்நாடு அரசு, அதற்கு பதிலாக சென்னையின் புறநகர்பகுதியான, காஞ்சிபுரம் மாவட்டத்தைச்சேர்ந்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையத்தை அமைத்து செயல்படுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து, சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் நின்று செல்ல வசதியாக தாம்பரம் அருகே முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டப்பட்டு வந்தது.
இந்த பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். ரூ.42.70 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்துமிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திறந்து வைத்துள்ளார்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையத்தில் பேருந்து ஓட்டுநர்களுக்கான ஓய்வறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அருகில் கட்டப்பட்டுள்ள காலநிலை பூங்கா, கோயம்பேடு சந்தையில் புதுப்பிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மையத்தையும் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.