சீனாவின் மக்கள்தொகை தொடர்ந்து சரிந்து வருவதை அடுத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் காதல் பாடம் நடத்த அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் கூட, 57 விழுக்காட்டு கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு காதலில் நாட்டமில்லை எனக் கூறியிருக்கின்றனர்.

சீன இளைஞர்கள் மத்தியில் காதல் மற்றும் திருமண வாழ்க்கைக் குறித்த அபிப்பிராயத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

காதலில் விழுந்தால், படிப்புக்கும் காதலுக்கும் எப்படி சரிசமமாக நேரத்தை ஒதுக்குவதென்ற குழப்பம் இளைஞர் மத்தியில் அதிகரித்திருப்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

காதல் மற்றும் திருமண பந்தம் குறித்து முறையான மற்றும் அறிவியல் பூர்வமான கல்வி இல்லாததால், உணர்ச்சிப்பூர்வமான உறவுகள் மீது இளையோர் தெளிவற்றப் புரிதலைக் கொண்டுள்ளனர்.

உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருந்த சீனாவில் இப்படி ஒருநிலைமை ஏற்பட்டுள்ளதை அடுத்து எதிர்காலத்தில் இந்த நிலை மேலும் மோசமாகி விடும் என்று கூறப்படுகிறது.

எனவே ஜுனியர் மாணவர்களுக்கு மக்கள்தொகை சார்ந்த அம்சங்கள் பற்றியும் சீனியர் மாணவர்களுக்கு நெருக்கமான உறவுகள் மற்றும் இரு பாலினத்தவருக்கிடையிலான தொடர்பு முறை குறித்தும் பாடம் நடத்த பல்கலைக்கழங்கங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு சீன அரசு அறிவுறுத்தியுள்ளது.

கேட்பதற்கு விநோதமாக இருந்தாலும், திருமண வாழ்க்கை, காதல், கருவுறுதல், குடும்பம் ஆகியவை குறித்து மாணவர்களிடத்தில் நேர்மறையான பார்வையை விதைப்பதற்கு அது அவசியமென, அதிகாரிகள் கூறுகின்றனர்.

பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள் வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு நுழைவதால், பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதில் அவர்களுக்குப் பெரும் பங்கு இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

தற்போது சீனாவின் மக்கள் தொகை 140 கோடியாக சரிந்துள்ளதை அடுத்து உலக மக்கள் தொகையில் அது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.