கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள சார்னியா நகரில் உள்ள லாம்ப்டன் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் குராசிஸ் சிங்கை (22) அவருடன் தங்கியிருந்த கிராஸ்லீ ஹண்டர் (36) என்பவர் கத்தியால் குத்தியதால் உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து ரத்தவெள்ளத்தில் விழுந்திருந்த குராசிஸ் சிங்கை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.
அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், இதனையடுத்து கிராஸ்லீ ஹண்டரிடம் நடத்திய விசாரணையில் வீட்டின் சமையலறையில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து அவரை கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது.
இதையடுத்து கிராஸ்லீ ஹண்டரை கைது செய்த போலீசார் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு இறந்த குராசிஸ் சிங் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது இனவெறுப்பு காரணமாக நடந்த கொலை அல்ல என்று போலீசார் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், சர்வதேச மாணவர்களிடம் எக்கச்சக்கமான கல்விக்கட்டணம் வசூலிக்கும் கல்லூரி, முதல் ஆண்டு மாணவரான குராசிஸ் சிங்குக்கு கல்லூரி வளாகத்தில் தங்க இடம் கொடுக்காமல் கல்லூரிக்கு வெளியே அறை ஒன்றில் தங்க அனுமதிக்கப்பட்டது எப்படி என்று கேள்வியெழுப்பியுள்ள மாணவர்கள், லாம்ப்டன் கல்லூரி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர்.