சென்னை: ஃ பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், கடலூர்- புதுச்சேரி- சென்னை நெடுஞ்சாலைகள் பாதிக்கப்பட்டு, வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தண்ணீர் வடிந்து சாலைகள் சீரானாதால், இன்று காலை முதல்  அந்த சாலைகளில் மீண்டும் போக்குவரத்து தொடங்கி உள்ளது.

 

 ஃபெஞ்சல் புயல்  மற்றும் சாத்தனூர் அணை முன்னறிவிப்பு இன்றி திறந்த விடப்பட்டதால் வட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. பல கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்டதுடன், தேசிய நெடுஞ்சாலைகளும் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டன. அதுபோல பல பகுதிகளில் தண்டவாளங்களும் வெள்ளத்தில் மூழ்கின. இதன் காரணமாக சாலை மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.   விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில்  பெய்த கனமழையால், தென்பெண்ணையாறு, அதன் கிளை ஆறுகளான மலட்டாறு, பம்பை ஆறு, நரி ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.  இந்த வெள்ளப்பெருக்கால்  ஆற்றின்  கரையோரம் உள்ள திருவெண்ணெய்நல்லூர், சித்தலிங்கமடம், அரசூர், காரப்பட்டு, இருவேல்பட்டு, ஆனத்தூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது.

இந்த பகுதிகளில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள் கூட வழங்கப்பட வில்லை, குடிதண்ணீர் இல்லை, குழந்தைகளுக்கு பால் கிடைக்கவில்லை, சாப்பாடு இல்லை என பல கிராம மக்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால்   ஆத்திரம் அடைந்த அரசூர், இருவேல்பட்டு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் அரசூர் கூட்டு சாலைக்கு திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து,  கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கலெக்டர், அரசூர் கூட்டுசாலையில் துண்டிக்கப்பட்ட இடம், இருவேல்பட்டு குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றை நோில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும், குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கு அமைச்சர் பொன்முடியுடன் ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் சென்ற நிலையில், அங்குள்ள மக்கள் அவர்கள்மீது சேற்றை வாரி இறைத்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது,   நிலைமை சீரடைந்ததால், இன்று காலை முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னை செல்லும் சாலையில் தற்போது இயல்பு நிலை திரும்பி, வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அப்பகுதியில் இன்று இயல்பு நிலை திரும்பியது. Fenjal Rain ஃபெஞ்சல் மழை பொதுமக்கள் மறியல்