மலேசியாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அந்நாட்டின் சில மாநிலங்களில் மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் பெய்த பெருமழையில் 3 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மலேசியாவில் மழையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
10 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை கொட்டித் தீர்க்கும் என்றும் வெள்ளத்தால் உயிரிழப்பு ஏற்படக்கூடும் என்றும் ஏற்கனவே விடுக்கப்பட்ட எச்சரிக்கையையும் மீறி பலர் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேற மறுத்து அங்கேயே இருந்துவருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வரும் ஞாயிறு வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுவதை அடுத்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மலேசியா கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க சுமார் 224 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1900 கோடி) செலவாகும் என்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், தெற்கு தாய்லாந்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு தாய்லாந்தில் அடுத்த இரண்டு நாட்கள் கனமழை தொடரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதை அடுத்து லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.