திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இன்று சாமி தரிசனம் செய்த உள்ளூர் பக்தர்கள் 90 நாட்களுக்குப் பிறகே மீண்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிகாக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

உள்ளூர் மக்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அது நிறுத்தப்பட்டது.

ஆந்திராவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை அடுத்து பொறுப்பேற்றுள்ள புதிய நிர்வாக குழு சாமி தரிசனம் செய்ய உள்ளூர் மக்களுக்கு மீண்டும் சிறப்பு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

இதையடுத்து திருமலை, திருப்பதி, சந்திரகிரி, ரேணிகுண்டா ஆகிய பகுதிகளில் வசிக்கும் பக்தர்களில் 3000 பேருக்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமையன்று இலவச டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த புதிய நடைமுறை இன்று (டிச. 3) செவ்வாய் கிழமை முதல் செயல்படுத்தப்பட்டது.

திருமலையில் உள்ள சமுதாயக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள கவுண்டரில் 500 டிக்கெட்டுகளும் திருப்பதியில் உள்ள மகத்தி கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கவுண்டரில் 2500 டிக்கெட்டுகளும் ஒவ்வொரு வாரமும் வழங்கப்படும்.

ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்களை அளித்து இந்த இலவச டிக்கெட்டுகளை வாங்கி தரிசனம் செய்யும் பக்தர்கள் 90 நாட்களுக்குப் பிறகே மீண்டும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலவச தரிசனம், நேர ஒதுக்கீடு தரிசனம், 300 ரூபாய் கட்டண தரிசனம், விஐபி தரிசனம் உள்ளிட்ட பல்வேறு தரிசன டிக்கெட்டுகள் அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது உள்ளூர் மக்களுக்கான இலவச தரிசனம் இன்று முதல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.