சென்னை: வங்கதேசத்தில் இந்துக்கள் மீது இஸ்லாமியர்கள் நடத்தும் தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் டிச.4-ம் தேதி இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி, மாநில பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்தியாவில் இருந்து வங்கதேசம் பிரிக்கப்பட்ட காலத்தில் இருந்து, வங்கதேசத்தில் எப்போது என்ன பிரச்சினை நடந்தாலும், அங்கிருக்கும் சிறுபான்மை இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களின் உடமைகளைக் கொளுத்துவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு உருவான பிறகு, மீண்டும் அதே பதற்றம் அங்கு தொற்றிக் கொண்டுள்ளது.
இந்து மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்து கோயில்கள் எரிக்கப்படுகின்றன. மீபத்தில் வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த சுவாமி சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு ஜாமீனில் வெளியே வராதபடி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு இந்து மக்களின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும். சிறுபான்மை இந்து மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
உலகில் எந்த மூலையிலும் இந்து மக்களுக்கு பாதிப்பு என்றால், அவர்களுக்காக குரல் கொடுக்க இந்தியாவில் உள்ள 120 கோடி இந்து மக்களும் தயாராக இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டவும், வங்கதேச அரசுக்கு நமது கண்டனத்தை தெரிவிக்கவும், தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் டிச.4-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
இதில் இந்து அமைப்புகள், ஆன்மிக அமைப்புகள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். அதற்கான அனுமதியும், பாதுகாப்பும் தர வேண்டும் என தமிழக காவல்துறை தலைமை அலுவலகத்தில் கேட்டிருக்கிறோம்.
இந்த ஆர்ப்பாட்டம் பாஜக சார்பில் நடக்கவில்லை. வங்கதேச இந்து மக்கள் உரிமை மீட்புக் குழு என அமைக்கப்பட்டு அதன் சார்பாக நடக்கிறது என கூறினார்.