சென்னை: பெஞ்சல் புயல்  காரணமாக சென்னையில் நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் பெரம்பூர் உள்பட 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டு உள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ள “பெஞ்சல்” புயல் இன்று (நவ.30) காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுவை அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்றையை விட இன்று மணிக்கு 7 கி.மீ வேகத்தில் புயல் மெதுவாக  நகர்ந்து வருவதால் பிற்பகலில் அல்லாமல் இரவு 7 மணி அளவில் புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.  இது மேலும் தாமததாக வாய்ப்பு உள்ளதாகவும் நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்களும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில்,  பொது மக்கள் பாதுகாப்பு கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும் மேற்கொண்டு வருகிறது.  இருந்தாலும் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர்தேங்கி வருவதுடன், முக்கிய வழித்தடங்களில் உளள  6 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால், அந்த சுரங்கப்பாதைகள்  மூடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில்   எழும்பூர், ஆர்பிஐ (பாரிஸ்), பெரம்பூர், பழவந்தாங்கல், ரங்கராஜபுரம், திருவொற்றியூர் அஜாக்ஸ் ஆகிய இடங்களில் உள்ள சுரங்கபாதைகள் மூடப்படுவ தாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், புரசைவாக்கம் ரித்தர்ட் டன் ரோடு, ராஜா முத்தையா சாலை, மில்லர்ஸ் ரோடு, அண்ணா பிளைவ் ஓவர் சர்வீஸ் ரோடு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.