சென்னை :  இன்று மாலை கரையை கடக்கும் ‘ஃபெஞ்சல் புயல்’ – மேக கூட்டங்களின் ரேடார் புகைப்படங்களை  வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில், இன்று மாலையில் தான் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய தகவலின்படி கணிக்கப்பட்டுள்ளது.  மேலும், ஃபெஞ்சல் புயல் காரணமாக குவிந்துள்ள மேக கூட்டங்களின் ரேடார் புகைப்படங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று பிற்பகல் ஃபெஞ்சல் புயலாக உருமாறி வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட வடதமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்த புயலானது 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதன் வேகத்தை 12 கிமீ என அதிகரித்து உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தும் இன்று பிற்பகல் கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது வெளியான வானிலை தகவலின்படி இன்று மாலை தான் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் சமயத்தில் 70 முதல் 80 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அந்த சமயம் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றுவட்டார மாவட்டங்களின் மேல் குவிந்துள்ள மேக கூட்டங்களை ரேடார் உதவியுடன் 3டி புகைப்படமாக எடுத்து அதனை சென்னை வானிலை ஆய்வு மையம் வீடியோவாக சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

வானிலை ஆய்வு மைய கூற்றுப்படி, காரைக்கால் – மாமல்லபுரம் இடையே உள்ள கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என கூறப்படுகிறது. இருந்தும் காற்றின் வேகம் பொறுத்து புயலின் திசையில் மாறுபாடு ஏற்பட்டு கரையை கடக்கும் இடமானது சென்னையை நெருங்கலாம் என்று தனியார் வானிலை ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.