டெல்லி:  எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை மற்றும் மாநிலங்களவை டிசம்பர் 2ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

அதானி விவகாரம்,  மணிப்பூர் விவகாரம், உ.பி. மோதல், காஷ்மீர் விவகாரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவாதிக்க வலியுறுத்தி பாராளுமன்றத்தில்  எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால்  டிச. 2 ஆம் தேதி காலை 11 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ந்தேதி தொடங்கிய நிலையில், முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நாடாளுமன்றம் எந்தவித விவாதமுமின்றி முடக்கப்பட்டு வருகிறது. தினசரி பல கோடி  அளவிலான  மக்கள் பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை அவை தொடங்கியதும் மீண்டும்  எதிர்க்கட்சிகள்  அவையில்  அமளியில் ஈடுபட்டுவந்தனர். அமளிக்கு மத்தியில் அவைத் தலைவா் ஜகதீப் தன்கர் பேசுகையில், ”இதை ஊக்குவிக்க முடியாது. தவறான முன்னுதாரணத்தை நாம் உருவாக்குகிறோம். பொறுத்தமற்ற நிலைக்கு நாம் செல்கிறோம்” என்று  காட்டமாக கூறியதுடன் அவையை  டிச. 2 ஆம் தேதி காலை 11 மணி வரை   ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.

மக்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக முதலில் மதியம் 12மணி வரை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவை கூடியதும், எதிர்க்கட்சியினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை தலைவர் ஓம் பிர்லா அவையை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.