சென்னை: தமிழ்நாடு அரசின் முடிவுகள் திருப்தியில்லை  என்று தெரிவித்துள்ள  தமிழ்நாடு அரசு மருத்துவர்கள்  சங்கத்தினர், மீண்டும் போராட்டத்திற்கான  தேதிகளை அறிவித்து உள்ளனர். அதன்படி நாளை முதல் போராட்டத்தில் குதிக்கின்றனர்.

நவம்பர் 25-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தின் முடிவாக  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள கூட்ட குறிப்புகள் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்திற்கு திருப்தியளிக்கவில்லை என்று தெரிவித்துள்ள சங்க நிர்வாகிகள்,  மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.

கடந்த 26ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சுகாதார துறை செயலர் மற்றும் துறை தலைவர்களுடன் நடைபெற்ற கூட்டத்தின் கூட்ட குறிப்புகளை தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் புறக்கணிப்பதாகவும், வரும் நாட்களில் மருத்துவர்களின் போராட்டம் தீவிரப்படுத்தப்படுமென தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் கூறியுள்ளது.

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் அவசர மாநில செயற்குழு கூட்டம் நேற்று (நவம்பர்.28) வியாழன்கிழமை தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் தலைமையில், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த  செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

 26-11-24 அன்று சுகாதார துறை செயலர் மற்றும் துறை தலைவர்களுடன் நடைபெற்ற கூட்டத்தின் Records of Discussions (கூட்ட குறிப்புகள்) சங்கம் மற்றும் உறுப்பினர்கள் அதிர்ச்சியும், வருத்தமும் அடையும் வகையில் உள்ளது. தேவையின்றி வேறு சங்கங்களின் கூட்டத்தையும் கோரிக்கைகளையும் சேர்த்து, நமது சங்கத்துடன் நடந்த கூட்டத்தில் அரசு ஏற்றுக் கொண்டதை கூட கொண்டு வராமல் வெளியிடப்பட்டுள்ளது.

முக்கியமான கோரிக்கைகளை கூட ஏற்றுக் கொண்டதை பதியாமல் நழுவலாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த Records of Discussions ஐ சங்கம் நிராகரிக்கிறது.‌ அதனால்,  தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்தினை தீவிரப்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

மாண்புமிகு முதல்வர் அவர்களும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களும் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய தீர்வு அளிக்க வேண்டும் என சங்கம் வேண்டுகிறது.

1-மகப்பேறு மரண தணிக்கை கூட்டம் அத்துறையின் வல்லுனர்களைக் (EXPERTS) கொண்டு மட்டுமே நடத்தப்பட வேண்டும். அத்தகைய ஆய்வுக் கூட்டத்திற்கான புதிய வரைமுறை (Anonymous Audit) உடனடியாக வகுக்கப்பட வேண்டும். மருத்துவரல்லாத வேறு அதிகாரிகள் தலையிடக்கூடாது.

2-மகப்பேறு மருத்துவர்கள் மிகவும் பற்றாக்குறையாக உள்ள நிலையில் தாய் மரணங்களை குறைக்க எந்த வழியிலும் உதவாத மென்டரிங் ( Mentoring) முறை கைவிடப்பட வேண்டும்.

3-மக்கள் நல்வாழ்வுத் துறையில் உள்ள அனைத்து மருத்துவர்கள் காலிபணியிடங்களும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் மருத்துவ பணியிடங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.

” 4- விருப்ப ஓய்வு முறையில் (VRS) ஓய்வு பெற விரும்பும் அனைத்து மருத்துவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்

5- திட்ட இயக்குனர்கள், மாவட்ட ஆட்சியர்கள் போன்ற உயர் அதிகாரிகள் டீன், இணை இயக்குனர் மாவட்ட சுகாதார அலுவலர் அவர்களுக்கு மட்டுமே ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும். மருத்துவர்களுக்கு நேரடியாக ஆய்வுக்கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும்.

6-நோயாளிகள் சம்பந்தப்பட்ட குறியீடுகள் (Targets)- (அறுவை சிகிச்சைகள் பிரசவங்கள் போன்றவைகள்) நிர்ணயிக்கப்படக்கூடாது. அதேபோன்று குறியீடுகளை நிர்ணயித்து ரேங்க் (Ranking) வழங்கும் திட்டமும் கைவிடப்பட வேண்டும். பொதுவாக ஒவ்வொரு மருத்துவமனையிலும் பலவித வசதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாளர்கள் இருக்கின்றனர். ஆனால் ஒரு சில அளவீடுகளை வைத்து ரேங்கிங் (Ranking) செய்வது தவறானதாகும்.

7-CMCHIS இன்சூரன்ஸ் திட்டம் பொதுமக்களுக்காக செயல்படுகிறது. இந்தத் திட்டத்தில் மருத்துவர்களுக்கு குறியீடு இருக்கக்கூடாது. Targets in number of cases or amount earned எனும் குறியீடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இதற்கான ஆய்வு கூட்டங்கள் ஒவ்வொரு நிலையத்திலும் டீன்கள் மற்றும் இயக்குனராலும் வாரந்தோறும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடத்தப்படுகிறது. மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் மருத்துவ படிவங்களை அனுப்பவும் மட்டுமே செய்வார்கள். ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் குறியீடுகள் வார்டு மேனேஜர்கள்/LO கொண்டு நடத்தப்பட வேண்டும்.

மருத்துவம் அல்லாத பணிகளை – அப்ரூவல் பெறுவது போன்றவை வார்டு மேனேஜர்/ Liaison Officer மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும். 8-மருத்துவர்களுக்கு ஆய்வுக் கூட்டங்கள் அவர்களுடைய பணி நேரத்திற்குள் நடத்தப்பட வேண்டும். மாவட்ட அதிகாரிகள் நடத்தும் கூட்டம் காலை 10 மணி முதல் மாலை 4 மணிக்குள் நடத்தப்பட வேண்டும்.

கடந்த 25.11.24 முதல் கீழ்க்கண்ட போராட்டங்களை தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம் நடத்தி வருகிறது.

1-ஆரம்ப சுகாதார நிலையங்கள், ESI டிஸ்பென்சரிகள், மாவட்ட, தாலுகா, பிற மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மருத்துவமனைகள் அனைத்திலும் உள்ள மருத்துவர்கள் மாநில மாவட்ட உயர் அதிகாரிகளால் நடத்தப்படும் ஆன்லைன் மற்றும் நேரடி கூட்டங்கள், மருத்துவமனை மற்றும் துறை ரீதியான கூட்டங்கள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.

2-நிர்வாக ரீதியான மாநில மாவட்ட மருத்துவமனை துறை அளவிலான அனைத்து வாட்சப் குரூப்பில் இருந்து மருத்துவர்கள் வெளியேறி விட்டனர்.

3-மாநில மாவட்ட வட்டார அளவிலான அறிக்கைகள், PICME பதிவேற்றங்கள், லக்க்ஷயா, காயகல்ப் போன்ற நிகழ்வுகள் அனைத்தையும் புறக்கணிப்பட்டிருக்கின்றன.

4-வருமுன் காப்போம் முகாம், ஊனமுற்றோர் பரிசோதனை முகாம், குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்கள், அனைத்தும் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

5-மகப்பேறு துறையில் அனைத்து அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள் அனைத்தும் (Elective Surgeries in OBG) DME, DMS, DPH, ESI மருத்துவமனைகளில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

ஏற்கனவே நடைபெற்று வரும் போராட்டங்களை தொடர்வதோடு கீழ்க்கண்ட போராட்டங்களையும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அறிவிக்கிறது.

1- வரும் 30.11.24 சனிக்கிழமை முதல் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான அனைத்து வகுப்புகளும் புறக்கணிக்கப்படும்.

2 -வரும் 30.11. 24 சனிக்கிழமை முதல் பயோமெட்ரி பதிவு முறை மற்றும் FRAS வருகை பதிவு முறையில் அனைத்து (DME , DMS, DPH, ESI) மருத்துவர்கள் தங்கள் வருகையினை பதிவு செய்ய மாட்டார்கள்.

3- வரும் 02.12. 24 திங்கள்கிழமை அன்று தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் அனைத்து மாவட்ட பிரிவுகளில் இருந்தும் தங்களது மாவட்டத்தில் சங்க மாவட்ட நிர்வாகிகள் அம்மாவட்டத்தில் உள்ள மருத்துவர் மற்றும் பணியாளர்கள் காலி பணியிடங்கள், இருக்கும் மருந்துகள் மருந்துகளுக்கான பட்ஜெட், தங்கள் மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து பத்திரிக்கையாளர்களுடன் பிரஸ்மீட் நடத்துவார்கள்.

4- வரும் 3.12.24 செவ்வாய்க்கிழமை அன்று அனைத்து மருத்துவமனைகளிலும் (DME , DMS, DPH, ESI) அவசரம் இல்லாத அனைத்து அறுவை சிகிச்சைகள் ஒரு நாள் அடையாளமாக நிறுத்தப்படும்.

மேற்கண்ட போராட்டங்களுக்குப் பிறகும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 04.12.24 அன்று மாநில செயற்குழு கூட்டி முடிவெடுக்கப்படும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.