சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாகஇன்று  சென்னை உள்பட பலமாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுஉள்ளது. காலை 6மணி வரை 8 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதி கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கனமழை முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை

விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த  நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்காலிக புயலாக மாறி வரும் நிலையில், சென்னை உள்பட பல மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட், யெல்லா அலர்ட் விடுக்கப்பட்டுஉள்ளது. இந்த புயல் காரணமாக, இன்று முதல் காற்றின் வேகம் மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக, இன்று  (நவ.29) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் அதேபோல ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல  நாளை ( நவ.30ஆம் தேதி)  தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.