சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க  நாளை (நவம்பர் 28-ந் தேதி) கடைசி நாள்.  இதுவரை நடத்தப்பட்ட முகாம்கள் மற்றும் ஆன்லைன் மூலம் 14.66 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரித்து வருகிறது.  இதையொட்டி கடந்த மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து  வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல், பெயர் இல்லாதவர்கள் மந்நும்  முகவரி மாற்றம், பெயர் நீக்கம் ஆகிய பணிகளையும் மேற்கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து,   நவம்பர் 16, 17, 23 மற்றும் 24 ஆகிய நான்கு நாட்கள் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இது தவிர ஆன்லைன் முறையிலும் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன

. இந்த சிறப்பு முகாம்களில் மட்டும் மொத்தம் 14 லட்சத்து 615 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 8 லட்சத்து 38 ஆயிரத்து 16 பேர் மனு கொடுத்து இருக்கின்றனர். வெளிநாட்டில் வசிக்கும் 4 பேர் தங்களது பெயரை சேர்க்க கூறி விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க 783 பேரும், பெயரை நீக்க கோரி 1 லட்சத்து 19 ஆயிரத்து 701 பேரும், பெயர் திருத்தம், முகவரி மற்றும் புகைப்பட மாற்றம் ஆகிய பணிகளை மேற்கொள்ள 4 லட்சத்து 42 ஆயிரத்து 111 பேரும் மனு கொடுத்து உள்ளனர்.

இதுதவிர ஆன்லைனில் 65 ஆயிரத்து 817 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்த நிலையில்,  பொதுமக்கள் வருகிற 28-ந் தேதி வரை சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் அல்லது ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நாளையுடன் விண்ணப்பம் செய்வுதற்கான கால அவகாசம் முடிவடைகிறது.

இதையடுத்து, வாக்காளர்கள் கொடுத்த  மனுக்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,  வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதனை பொதுமக்கள் https://www.elections.tn.gov.in பொது என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம். அதில் பெயர் சேர்க்கவோ, திருத்தம் மேற்கொள்ளவோ அல்லது ஆதார் நம்பர் சேர்க்கவோ https://voters.eci.gov.in என்ற இணையதளம், மற்றும் ‘‘வாக்காளர் உதவி’’ செல்போன் செயலி ஆகியவற்றின் மூலம் ஆன்லைன் முறையிலும் விண்ணப்பிக்கலாம்.

இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி வெளியிடப்படும்.