சென்னை: ஃபெங்கல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், கனமழை பெய்து வருவதால்,  மாநிலத்தில் உள்ள துறை முகங்களில் புயல் எச்சரிக்கை 3ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுபெறக் கூடும் எனவும், இது வடக்கு – வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும், என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை கொட்டி வருகிறது.

இதையொட்டி,  பாம்பன் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.

தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  இலங்கை – திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 370 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தென்கிழக்கே 470 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு   15 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் காற்று மணிக்கு 55-லிருந்து அதிகப்பட்சம் 65 கிலோ மீட்டர் வேகம் வரையிலும வீசக்கூடும் என்பதால் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்பும்படி மீன்வளத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இதையடுத்து, ராமேசுவரம் அருகே பாம்பன் துறைமுகம் உள்பட தூத்துக்குடி, குளச்சல், நாகப்பட்டிணம், காரைக்கால், கடலூர், புதுச்சேரி, காட்டுப்பள்ளி, சென்னை, எண்ணூர் ஆகிய துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் ராமேசுவரம் சேராங்காடு, பாம்பன் தெற்குவாடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்தினால் மீனவர்களின் குடிசைகளுக்குள் கடல்நீர் புகுந்தது. இதனால் மீனவ மக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

புயல் மற்றும் கனமழை தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பினைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையினை எதிர்கொள்ள ஏதுவாக மாவட்ட நிர்வாகம் சார்பாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.