ஆஸ்திரிய தலைநகர் வியன்னா-வில் இருந்து அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள டல்லாஸ் விமான நிலையம் சென்று கொண்டிருந்த விமானத்தில் இருந்து நாய் ஒன்று தப்பிச் சென்றதை அடுத்து அதை தேடுவதற்காக பாரிஸ் விமான நிலைய ஓடுபாதைகள் மூடப்பட்டன.

நவம்பர் 19 ஆம் தேதி ஏர் பிரான்ஸ் ஜெட் விமானத்தின் சரக்கு வைக்கும் பகுதியில் பிரதேயக கூண்டில் வைக்கப்பட்டிந்த அந்த நாய்க்கு அமல்கா என்று பெயரிடப்பட்டிருந்தது.

நடுவானில் விமானம் குலுங்கிய (turbulence) போது அமல்கா வைக்கப்பட்டிருந்த கூண்டின் பூட்டு திறந்து கொண்ட நிலையில், பாரிஸின் சார்லஸ்-டி-கால்லே விமான நிலையத்தில் அந்த விமானம் இடைநின்றுள்ளது.

அப்போது விமான நிறுவன ஊழியர்கள் சரக்கு வைக்கும் பகுதியை திறந்த உடன் விமானத்தில் இருந்து குதித்து ஓடிய அந்த நாய் யாரிடமும் பிடிபடாமல் அங்குமிங்கும் ஓடியது.

இதையடுத்து அதன் உரிமையாளரான க்ரோவேசியா நாட்டைச் சேர்ந்த மிசா என்ற பயணிக்கு தகவல் தரப்பட்டு அவர் இறங்கிவந்து அதனை பிடிக்க நினைத்தபோது அது அவருக்கும் பிடிபடாமல் ஓடிச் சென்றது.

கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி சீர்குலைவால் (attention deficit hyperactivity disorder – ADHD) பாதிக்கப்பட்ட மிசா தனக்கு துணையாக அமல்கா என்ற அந்த நாய் வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அந்த நாயை கண்டுபிடிக்க முடியாமல் சோகத்தில் மூழ்கியுள்ள மிசா காணாமல் போன தனது நாய் அமல்கா-வை கண்டுபிடித்து தருமாறு விமான நிலைய அதிகாரிகளிடம் வலியுறுத்திவருகிறார்.

8,048 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த விமான நிலையத்தில் அமல்கா எங்கு சென்றது என்பது தெரியாமல் தேடி வரும் அந்த விமான நிலைய ஊழியர்கள் அதற்காக விமான நிலையத்தின் நான்கு ஓடுபாதைகளில் இரண்டை மூடியுள்ளனர்.

தவிர, டிரோன் உதவியுடன் அந்த நாயை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த ஒரு வாரத்தில் அந்த நாயை பலமுறை பார்த்த போதும் அதை பிடிக்க முடியவில்லை என்று ஏர் பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.