சென்னை : உலக அளவில் சிறந்த காவல்துறையாக தமிழ்நாடு காவல்துறை விளங்குகிறது என சீருடை பணியாளர்களுக்கு பணி நியமனம் ஆணைகள் வழங்கும் விழாவில் பேசிய, அந்த துறைக்கு தலைமை வகிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
சென்னையில், இன்று காவல்துறை சீருடை பணியாளர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினதாக காவல்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, தேர்வு செய்யப்பட்ட சீருடை பணியாளர்களுக்கு பணி நியமனை ஆணையை வழங்கினார்.
பின்னர் அங்கு சிறப்பு ஆற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், “165 ஆண்டுகள் பழமையும் பெருமையும் மிக்கது தமிழ்நாடு காவல்துறை. காவலர்கள் போற்றக்கூடிய அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. காவலர்களுக்கு பல நலத்திட்டங்களை நிறைவேற்றும் அரசாக உள்ளது. உலக அளவில் சிறந்த காவல்துறையாக தமிழ்நாடு காவல்துறை விளங்குகிறது.காவல்துறையை மேம்படுத்த முதல்முறையாக காவல் ஆணையம் அமைத்தது திமுக அரசு. கடந்த 3 ஆண்டுகளில் காவலர்கள் முதல் டி.எஸ்.பி. வரை 17,000 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
2-ம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர்கள் வரையிலான ஆளினர்களுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காவலர்களுக்கான இடர்படி ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. காவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசின் காலம்தான் தமிழ்நாடு காவல்துறையின் பொற்காலம். மக்களின் துன்பங்களை தீர்க்க காவல்துறையினர் பாடுபட வேண்டும். குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதுதான் காவல்துறையின் இலக்காக இருக்க வேண்டும். சைபர் குற்றங்கள், போதைப்பொருள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்தான் நமக்கு சவாலாக உள்ளன. புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக காவல்துறையினர் நடந்துகொள்ள வேண்டும். உயர் அதிகாரிகள் கீழ்நிலை காவல்துறையினருடன் நட்புணர்வோடு பழக வேண்டும். கீழ் நிலை காவலர்களுக்கு பயம் வரும் வகையில் உயர் அதிகாரிகள் பழகக் கூடாது. மக்களின் நிம்மதியை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு காவல் துறையிடம் தான் உள்ளது என கூறினார்.
தமிழ்நாடு காவல்துறையினர் நடவடிக்கை ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. வேங்கைவாசல் சம்பவம் முதல், நடிகை கஸ்தூரி கைது வரை, காவல்துறையினரின் நடவடிக்கை கேலிக்குறியதாக மாறி இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், காவல்துறையினரின் நடவடிக்கையை தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது துறைதான் சிறந்தது என பெருமிதம் தெரிவித்து உள்ளார்.