சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றுமுதல் டிசம்பர் 1ந்தேதி வரை மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதலே பரவலாக மிதமானது முதல் கனமழை பெய்து வரும் நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் இன்றுமுதல், 5 நாள்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று மயிலாடுதுறை நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும், நாளை கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 20 செ.மீட்டருக்கும் கூடுதலாக மழை பெய்யும் என்பதால், அதனை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் சென்னை உள்பட பல மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்குள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுஉள்ளது.
இதைத்தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில், காலை 9 மணி முதல் பல இடங்களில் பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் முன்விளக்கை போட்டுக்கொண்டு பயணம் செய்து வருகின்றனர். சில இடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால், அந்த பகுதிகளில் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்து, அவதியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், மழை நிலவரங்களை வெளியிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான், சென்னையில் இன்றுமுதல் 5 நாட்கள் நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை தொடங்க உள்ளதாகவும், இது அடுத்த 4-5 நாள்களுக்கு நீடிக்கும்.
டெல்டா(நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சாவூர்) மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று அதி கனமழையை எதிர்பார்க்கலாம்.
கடலூர், புதுவையிலும் கனமழை பெய்யும்.
நாகையில் இருந்து 630 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம்! காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இலங்கைக்கு கீழே உள்ளது. இது வடக்கு நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. மிகவும் மெதுவாக நகரத் தொடங்கியுள்ளதால், கடலோர மாவட்டங்களான சென்னை மற்றும் அதன் புறநகரில் இன்றிலிருந்து 4-5 நாள்களுக்கு, டிசம்பர் 1 வரை மழை நீடிக்கும்.
சென்னையில் நவ. 27 ஆம் தேதியில் இருந்து மிக கனமழை பெய்யத் தொடங்கவுள்ளது.
தாழ்வு மண்டலமானது சென்னைக்கு கிழே கரையை கடக்கும்போது, வடதமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையை நோக்கி மழை மேகக் கூட்டங்கள் நெருங்கி வந்துக்கொண்டிருப்பதால் சென்னை மற்றும் புறநகரில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.