இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான வழக்கில் அதானி குற்றமற்றவர் என்று அமெரிக்க நீதிமன்றம் கூறும் வரை அதானி குழும நிறுவனத்தில் புதிய முதலீடுகள் எதுவும் செய்யப்போவதில்லை என்று டோடல் எனர்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.

மின் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமான டோடல் எனர்ஜி நிறுவனத்தின் இந்த அதிரடி அறிவிப்பு அதானி குழுமத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் திட்டங்களை செயல்படுத்தி வரும் டோடல் எனர்ஜி 2021ம் ஆண்டு அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய நிலையில் தற்போது 19.75 சதவீத பங்குகளை வைத்துள்ளது.

அமெரிக்க நீதிமன்றத்தில் கவுதம் அதானி மற்றும் அவரது மருமகன் மற்றும் நிறுவன ஊழியர்கள் மீது தனிப்பட்ட முறையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டிரம்ப் ஆதரவாளரான வழக்கறிஞர் பீஸ் தொடர்ந்த இந்த வழக்கில் அதானி குழும நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு இல்லையென்றாலும் அதானி உள்ளிட்டவர்கள் மீது பணமோசடி மற்றும் லஞ்சம் கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டோடல் எனர்ஜி நிறுவனத்தின் லஞ்ச ஊழலுக்கு எதிரான கொள்கைக்கு விரோதமாக அது தொடர்புடைய நிறுவனத்தின் தலைவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதை அடுத்து அதானி தொடர்புடைய நிறுவனங்களில் புதிதாக முதலீடு செய்யப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.

ஏற்கனவே பல்வேறு நாடுகளில் அதானி நிறுவனம் தொடங்குவதாக இருந்த திட்டங்கள் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் தற்போது அதன் பங்கு நிறுவனமும் பின்வாங்கியுள்ளதால் அதானி நிறுவனத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.