சென்னை: காசநோய் (TB) ஒழிப்பு திட்டத்தை  தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள்  தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என   பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

இந்தியாவில் காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, 2025-ம் ஆண்டுக்குள் அந்நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.   உலகளாவிய காசநோய் சுமையில் 26% இந்தியாவில் இருந்து வருகிறது, இந்த நோய் நூற்றாண்டின் மிகப்பெரிய உலகளாவிய பொது சுகாதார நெருக்கடியாக உள்ளது.

இந்திய அரசின் முதன்மைத் திட்டமான தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் மூலம் காசநோயை (டிபி) ஒழிக்கும் இலக்கை நோக்கி இந்தியா முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.  அதன்படி,   காசநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கு உதவும் இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில், காசநோய் மற்றும் மார்பு நோய்களுக்கான மாவட்ட காசநோய் அலுவலர்கள், மாவட்ட காசநோய் மையங்களில் திட்டத்தை செயல்படுத்துபவர்கள், மருந்துகள் மற்றும் நோயறிதல்களை சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்யவும், அதற்கான ஆய்வங்களும் ஏராளமாக அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின்படி, மொத்த காசநோய் அறிவிப்பு விகிதம் 100,000 மக்கள்தொகைக்கு 124 ஆக உள்ளது, சிகிச்சை யின் வெற்றி விகிதம் 85% ஆகும், இது சரியான நேரத்தில் கண்டறிதல் மற்றும் பயனுள்ள சிகிச்சையில் நமது மாநிலத்தின் கவனத்தை பிரதிபலிக்கிறது. இது ஒரு பாராட்டத்தக்க சாதனை என கூறப்படுகிறது.

இந்த நிலையில்,   காசநோய் (TB) ஒழிப்பு திட்டத்தை  தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள்  தீவிரமாக செயல்படுத்த வேண்டும்  என  அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் , காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் கீழ் இத்திட்டத்தை மேலும் தீவிரமாக செயல்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். அதை கருத்தில் கொண்டு மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. அதன்படி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் சிகிச்சை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆரம்பத்திலேயே காசநோயைக் கண்டறிந்து சிகிச்சை வழங்க ஊடுகதிர் பரிசோதனைகளை தொடக்கத்திலேயே மேற்கொள்ள வேண்டும். காசநோய் பாதிக்கப்பட்டவர்களில், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களை கண்டறிந்து உரிய ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். காசநோய் ஒழிப்பு திட்ட ஆவணங்கள், மருத்துவ பணியாளர்களின் செயல்பாடுகளை மாதந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.