சென்னை: சவுதியில் நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலத்தில் நடப்பாண்டு பிரபல பவுலரான சென்னையைச் சேர்ந்த அஸ்வின் ரவிச்சந்திரனை மீண்டும் சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஸ்வின் சென்னை அணியில் விளையாட இருப்பது தமிழ்நாடு அரசிகர்களிடையே விசில்போட வைத்துள்ளது.

சமீபத்தில் 3 ஆண்டுகளுக்கான ஐபிஎஸ் தொடர் விவரங்களை பிசிசிஐ வெளியிட்டது. இதைத்தொடர்ந்து,  ஐபிஎல் ஏலத்திற்கான நடவடிக்கை கள் தொடங்கியது.   இந்த ஏலத்தில், 577 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 18 வீரர்களையும், அதிகபட்சம் 25 வீரர்களையும் வைத்து அணியை அமைக்கலாம்.

இந்த நிலையில்,  இந்திய நேரப்படி நேற்று ( நவம்பர் 24ந்தேதி)  மதியம் 3.30 மணிக்கு சவுதியில் தொடங்கியது. நேற்றைய ஏலத்தில் ரிசப் பண்டை எடுக்க கடும் போட்டி நிலவியது. அவரை ஆர்சிபி அணி ரூ.33 கோடிக்கு அள்ளியது.  இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிந்தவரை பழைய வீரர்களையே அணிக்கு கொண்டு வர ஆரம்பம் முதலே முயற்சித்தது. அதன்படி, கான்வே மற்றும் ரச்சினை மீண்டும் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்த நிலையில், இந்திய அணியின்  சுழற்பந்து வீச்சாளரான, தமிழ்நாட்டைச் சேர்ந்த  ரவிச்சந்திரன் அஸ்வினை எடுக்கவும் கடும் போட்டி நிலவியது. இருந்தாலும் சிஎஸ்கே அணி  9.75 கோடி கொடுத்து அஸ்வினை ஏலத்தில்  வாங்கியது. ரூ. 2 கோடிக்கு அஸ்வின் அடிப்படை விலையில் களமிறங்கிய நிலையில், அவரின் அடிப்படை விலையை விட பல மடங்கு கொடுத்து வாங்கியது.

ஐபிஎல் போட்டியில் கடந்த 2008 முதல் 2015 வரை சிஎஸ்கே அணியில் விளையாடி வந்த அஸ்வின், பின்னர்,  கடந்த 10 ஆண்டுகளாக    பஞ்சாப் கிங்ஸ் , டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் என பல அணிகள் சார்பாக விளையாடி வந்தார். இந்த நிலையில்,    10 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது, மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இணைந்துள்ளது சிஎஸ்கே ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கு நன்றி தெரிவித்து, உங்கள் அன்புடன் அஸ்வின்  வீடியோ வெளியிட்டுள்ளார்.