இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான நவ்ஜோத் சித்து தனது மனைவி கடுமையான உணவு முறையை பின்பற்றி புற்றுநோயை முறியடித்ததாக கூறியிருந்தார்.
புற்றுநோயை குணப்படுத்துவது குறித்த இவரின் கருத்து “நிரூபிக்கப்படாதது” என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதுடன் “நிரூபிக்கப்படாத வைத்தியங்களை” பின்பற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
பால் பொருட்கள் மற்றும் சர்க்கரையை சாப்பிடாமல் தவிர்த்து ஹல்டி (மஞ்சள்) மற்றும் வேம்பு ஆகியவற்றை சாப்பிட்டது தனது மனைவியின் ‘குணப்படுத்த முடியாத’ புற்றுநோயை குணப்படுத்த உதவியது என்று நவ்ஜோத் சித்து வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யோகா, நேச்சுரோபதி, சித்தா மற்றும் யுனானி உள்ளிட்ட மருத்துவமுறைகள், தவிர, வீட்டில் கிடைக்கக்கூடிய மூலிகைகள் மற்றும் செடிகள் மூலம் புற்றுநோய் குணப்படுத்தப்பட்டதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து மும்பை டாடா நினைவு மருத்துவமனை புற்றுநோயியல் நிபுணர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நோயாளிகள் யாரும் “நிரூபிக்கப்படாத வைத்தியங்களை” பின்பற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.
அதே நேரத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரின் கருத்துகளை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ள மருத்துவர்கள் விஞ்ஞானபூர்வமற்ற மற்றும் ஆதாரமற்ற பரிந்துரைகளை கடுமையாக சாடினர்.
இந்த அறிக்கையில் டாடா மெமோரியல் மருத்துவமனையின் தற்போதைய மற்றும் முன்னாள் புற்றுநோயியல் நிபுணர்கள் 262 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
வேம்பு மற்றும் மஞ்சளை புற்றுநோய் எதிர்ப்புக்காக பயன்படுத்த பரிந்துரைக்க மருத்துவ தரவு எதுவும் இல்லை என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயாளிகள் நிரூபிக்கப்படாத மருந்துகளைப் பின்பற்றி சிகிச்சையைத் தாமதப்படுத்த வேண்டாம் என்று புற்றுநோயியல் நிபுணர்கள் வலியுறுத்தினர். “புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்தால் குணப்படுத்த முடியும் மற்றும் புற்றுநோய்க்கான நிரூபிக்கப்பட்ட சிகிச்சைகளில் அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபி ஆகியவை அடங்கும்” என்று அந்த அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி மூலம் புற்றுநோய் குணமானதற்கான சான்றுகள் உள்ளன. ஆனால், மஞ்சள், வேம்பு போன்றவை குறித்து எந்த ஆதாரமும் இல்லை அறிவியலற்ற மற்றும் ஆதாரமற்ற பரிந்துரைகளால் யாரும் “ஏமாறக்கூடாது” என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.