சென்னை: மறைந்த  முரசொலி மாறன் நினைவு நாளையொட்டி, அவருக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  புகழாரம் சூட்டி உள்ளனர். அவரது சிலைக்கு, அமைச்சர்கள்  திமுக பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்தியாவின் நவீன பொருளாதார கொள்கைகளை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவர் முரசொலி மாறன் என அழைக்கப்படுகிறார். திமுகவின் டெல்லி முகம் கலைஞரின் மருமகன், எழுத்தாளர், என்று பன்முகத்தன்மை கொண்ட முரசொலி மாறன் நினைவுதினம் இன்று. இந்த நாளில் அவரை போற்றும் வகையில், முரசொலி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், முக்கிய பிரமுகர்கள் என பல தரப்பினரும் மலர்தூவி மரியாதை செய்து வருகின்றனர்.

முரசொலி மாறன் நினைவு நாளையொட்டி,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்  எனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், டெல்லியில் கழகத்துக்கும், உலக அரங்கில் இந்தியாவுக்கும் பெருமை தேடித் தந்த பண்பின் திருவுருவம் மதிப்புக்குரிய முரசொலி மாறன் அவர்களின் நினைவுநாள்! தலைவர் கலைஞர் மீது கொண்ட தூய அன்பு – ஒப்பிலா அறிவுக்கூர்மை – மாறாக் கொள்கை என எடுத்துக்காட்டாக வாழ்ந்து நிறைந்த அவரது பணிகளை நன்றியுடன் இந்நாளில் போற்றுகிறேன்  என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் புகழ் என்றென்றும் போற்றுதலுக்குரியது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். நம் எல்லோரின் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய முரசொலி மாறன் நினைவு நாள் இன்று. கலைஞருக்கும், திமுகவுக்கும் உற்ற துணையாக இருந்து அதன்மூலம் தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைத்தவர் முரசொலி மாறன். கலைஞரின் மனசாட்சி, மாநில சுயாட்சியை வலியுறுத்திய ஜனநாயக போர்க்குரல் முரசொலி மாறன். டெல்லி அரசியல் அரங்கில் திமுகவுக்கான கம்பீர இடத்தை உறுதி செய்தவர் முரசொலி மாறன் என உதயநிதி தெரிவித்துள்ளார்.

முரசொலி மாறனின் 21-ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி திருவண்ணாமலையில் முரசொலி மாறன் திருவுருவப் படத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் முரசொலி மாறன் திருவுருவப் படத்துக்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முரசொலி மாறன் உருவப்படத்துக்கு அமைச்சர் கோவி.செழியன், முரசொலி எம்.பி. உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். திருவையாறு எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன், மேயர் ராமநாதன், முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மரியாதை செலுத்தினர்.

கும்பகோணத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் திருவுருவப் படத்துக்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பாக முரசொலி மாறன் படத்துக்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.