மதுரை: வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் கழிவுநீர் கலக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், பொதுமக்களும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள், விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே நெல்லையின் அடையாளமாக உள்ள தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளை சாட்டையை சுழற்றி வருவதுடன் நீதிபதிகள் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர். மேலும், ஆற்றில், கழிவுநீரை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கடுமையாக உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து மதுரை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
வைகை ஆறு பாயும் பகுதிகளான, தேனி மூல வைகை துவங்கி ராமநாதபுரம் வரையிலான வைகையாற்றில் 177 இடங்களில் கழிவுநீர் கலக்கப்படுகிறது. 5 இடங்களில் நீர் மாசடைந்துள்ளதாக உயிர்ச்சூழல் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரை வழக்கறிஞர் மணிபாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், வைகை வருசநாட்டில் உற்பத்தியாகி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் வழியாக கடலில் கலக்கிறது. தேனி, மதுரை, ராமநாதபுரம் பகுதிகளில் கழிவுநீர் கலக்கிறது; மழைநீர் வடிகால் அனைத்தும் கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டன. ஆற்றின் நிலையை கருத்தில் கொண்டு தேனி முதல் ராமநாதபுரம் வரை கழிவுநீர் கலப்பதை தடுக்க சிறப்பு குழு தேவை என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுமீதான விசாரணையைத் தொடர்ந்து, இது தொடர்பாக மத்திய அரசின் நீர்வளத்துறை, தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அதிகாரிகள், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்கள் பதில் தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, நகரின் நடுவே செல்லும் வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக தனியார் தொண்டு நிறுவனம் சர்வே எடுத்தது. மதுரை நகர் பகுதியில் 64 இடங்களில் கழிவு நீர் கலப்பதாக தகவல் வெளியானது.
இதையடுத்து மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனம் மூலம் வைகை ஆற்றில் கலப்பு இடங்கள் தொடர்பாக தனியாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. அந்நிறுவனம் சார்பில் வைகையாற்றின் இருபுறங்களிலும் 41 இடங்களில் மேற்கொண்ட ஆய்வில் 28 இடங்களில் கழிவுநீர் கலப்பது கண்டறியப்பட்டது. இதுதொடர்பான விரிவான அறிக்கையை அந்த நிறுவனம் மாநகராட்சிக்கு அளித்துள்ளது.