எந்திர சனீஸ்வரர் திருக்கோயில், ஏரிக்குப்பம், திருவண்ணாமலை மாவட்டம்.
நவக்கிரகங்களில் ஒருவரான சனி பகவானை, சிலை வடிவில் தரிசித்திருப்பீர்கள். வேலூர் அருகிலுள்ள ஏரிக்குப்பத்தில் இவர் யந்திரம் பொறித்த, சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். பல்லாண்டுகளுக்கு முன், இப்பகுதியை ஆண்ட சிற்றரசர் ஒருவர் இங்கு சனீஸ்வரருக்கு கோயில் எழுப்ப விரும்பினார். சனீஸ்வரர், ஈஸ்வர பட்டம் பெற்றவர், என்பதன் அடிப்படையில் எந்திரங்களை பிரதிஷ்டை செய்து, சிவலிங்கத்தின் பாண வடிவிலேயே சிலை அமைத்து, கோயில் எழுப்பினார். பல்லாண்டுகளுக்குப்பின் கோயில் அழிந்து, சுவாமி சிலை மட்டும் திறந்தவெளியில் இருந்தது. பின், பக்தர்கள் இங்கு சுவாமி இருந்த இடத்தில் கோயில் எழுப்பினர். எந்திரங்களுடன் இருப்பதால் இவருக்கு எந்திர சனீஸ்வரர் என்றே பெயர் ஏற்பட்டது.
மூலஸ்தானத்தில் தாமரை பீடத்தின் மீது, இரண்டரை அடி அகலம், ஆறரை அடி உயரத்துடன் அமைந்த சிவலிங்க அமைப்பில் சனீஸ்வரர் காட்சியளிக்கிறார். சிலையின் உச்சியில் சிவனைப் போலவே சூரியன், சந்திரன் உள்ளனர். நடுவே காகம் இருக்கிறது. இலிங்க பாணத்தின் மத்தியில் அறுகோண அமைப்பிலுள்ள “ஷட்கோண எந்திரம்” உள்ளது. இச்சிலையில் நமசிவாய என்னும் சிவமந்திரம், பீஜாட்சர மந்திரம், லட்சுமிகடாட்ச மந்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
சுற்றிலும் வயல் வெளிகள் இருக்க, அதன் மத்தியில் அமைந்த கோயில் இது. கோயில் முகப்பில் ஐந்து காகங்கள் பூட்டிய தேரில், சனீஸ்வரர் வருவது போன்ற சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. சன்னதி முன் மண்டபத்தில் மேல்புறம் வாகனத்துடன் கூடிய நவக்கிரகங்கள் ஓவிய வடிவில் உள்ளனர். சுவாமி பல்லாண்டுகளாக சன்னதி இல்லாமல் இருந்ததன் அடிப்படையில், தற்போதும் சனீஸ்வரர் சன்னதியில் மேற்கூரை கிடையாது. காற்று, மழை, வெயில் அனைத்தும் சனீஸ்வரர் மீது விழும்படியாக சன்னதி அமைந்துள்ளது. இவருக்கு சிவனுக்கு உகந்த வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறப்பு.
சனிக்கிழமைகளில் சனி ஓரை நேரத்தில் (காலை 6 – 7.30 மணிக்குள்) சனீஸ்வரருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்படும். பின், கோபூஜையுடன், விசேஷ யாகசாலை பூஜை நடக்கும். காணும் பொங்கல் பண்டிகையன்று இவருக்கு 108 பால்குட அபிஷேகம் நடக்கும். சனீஸ்வரரின் தந்தை சூரியபகவான். இவரே, இங்கு தீர்த்தமாக இருக்கிறார். கோயில் அருகேயுள்ள வயலின் மத்தியில் பாஸ்கர (சூரியன்) தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தால் சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. இதையே பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருகிறார்கள்.
சனீஸ்வரரே இங்கு பிரதான மூலவராவார். பிரகாரத்தில் வரசித்தி விநாயகர் சன்னதி மட்டும் உள்ளது.
திருவிழா:
சனிப்பெயர்ச்சி
வேண்டுகோள்:
சனிப்பெயர்ச்சியால் உண்டாகும் தோஷம் நீங்கவும், ஜாதக ரீதியாக சனி நீசம் பெற்றவர்களும் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். சனிப்பெயர்ச்சி விழா இவருக்கு 5 நாள் நடக்கும். இவ்வேளையில் சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம் நடத்தப்படும். திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்க, வழக்குகளில் வெற்றி பெற இங்கு வழிபடுகிறார்கள். சனிபகவான் மனிதர்களின் ஆயுளை நிர்ணயிக்கும் ஆயுள், தொழிலை நிர்ணயம் செய்பவராக இருக்கிறார். எனவே, நீண்ட ஆயுளுடன் இருக்கவும், தொழில் சிறக்கவும் இவருக்கு எள் தீபமேற்றி வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்