உக்ரைன் டினிப்ரோ நகரில் உள்ள ராணுவ தொழிற்சாலையை இலக்காகக் கொண்டு ரஷ்யா நேற்று ஏவிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) பிரிட்டனுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் ATACMS மற்றும் பிரிட்டனின் ஸ்டார்ம் ஷேடோ (Storm Shadow) க்ரூஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது.
ரஷ்யாவில் இலக்குகளைத் தாக்க உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருபவர்கள் மீது தாக்குதல் நடத்த ரஷ்யாவுக்கு உரிமை உள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.
இதுகுறித்து தொலைக்காட்சி மூலம் அவர் விடுத்துள்ள அறிக்கையில், அப்படி தாக்குதலுக்கு இலக்காகும் நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி அவர்களை வெளியேற்ற முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் உக்ரைன் மீது ஏவப்பட்ட ICBM ஏவுகணை பல ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து சென்று இலக்குகளை தாக்கும் வல்லமை கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மாஸ்கோவில் இருந்து 2500 கி.மீ. தூரத்தில் உள்ள லண்டன் தான் அதன் அடுத்த இலக்கு என்று கூறப்படுவதுடன் ரஷ்யா ஏவிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் திறன் இதனை உறுதிப்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.
மேலும், ரஷ்யா உடனான போரில் அமெரிக்க ராணுவ தளவாடங்களை பயன்படுத்த வழங்கப்பட்டிருக்கும் அனுமதி பேச்சுவார்த்தை மூலம் இழந்த தங்கள் நாட்டின் பகுதிகளை மீட்க உக்ரைனுக்கு உதவும் என்று கூறப்படுகிறது.
அதேவேளையில், இதுபோன்ற எந்த ஒரு நிர்பந்தத்திற்கும் ஆளாகாமல் இருப்பதையே ரஷ்யா விரும்புவதாகத் தெரிகிறது.
ரஷ்யாவின் இந்த நிலைப்பாடு மற்றும் உக்ரைன் மீதான போரில் புதிதாக பயன்படுத்தப்பட்டுள்ள ஆயுதங்கள் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் நேட்டோ நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாகவே கருதப்படுகிறது.
உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் (ICBM) ஏவுகணையை ரஷ்யா ஏவியது