சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
நவம்பர் 1ந்தேதி உள்ளாட்சி தினத்தன்று நடைபெற வேண்டிய கிராமசபை கூட்டம் பருவமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், அந்த கூட்டம் நவம்பர் 23ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நாளை கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த கிராம சபை கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், மேலும் மக்களின் பல்வேறு கோரிக்கைகள் உள்பட அனைத்து கோரிகைகள் குறித்து விவாதிக்க அறிபுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த கிராமசபை கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்களும், அனைத்து ஊராட்சிமன்ற உறுப்பினர்களும், ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும், நாளை நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும், கூட்ட நிகழ்வுகளை நம்ம கிராம சபை செயலி “Namma Grama Sabhai Mobile App” மூலம் உள்ளீடு செய்திட வேண்டும் எனவும், அது குறித்த அறிக்கையை இன்றே அளித்திடவும், கூட்டம் தொடர்பான அறிக்கையினை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.