சூரிய மின் திட்டத்திற்காக அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்ற பணத்தை இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்து மோசடியில் ஈடுபட்டதாக அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில் அதானியை கைது செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி இதனை வலியுறுத்தினார்.
இந்திய அதிகாரிகளுக்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர முன்வந்ததாக தொழில் அதிபர் கவுதம் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆனால் அதானி இந்தியாவில் சுதந்திரமாக சுற்றி வருவதை பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது. கவுதம் அதானியை பிரதமர் மோடி பாதுகாத்து வருகிறார்.
அதானி மீது அமெரிக்காவில் நடவடிக்கை எடுக்கப்படும் போது இந்தியாவில் மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்க முதலீடுகளை முறைகேடாக ஈர்த்த அதானியால் இந்தியாவின் பெயர் கெட்டுப் போய்விட்டதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
தொழிலதிபர் அதானியை பிரதமர் மோடி ஏன் பாதுகாக்கிறார்? என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, “அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதானி விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவை உடனே அமைக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் அலுவலகத்தில் மின்தடை ஏற்பட்டதை அடுத்து இது அதானி பவரா அல்லது மோடியின் பவரா என்று கிண்டலடித்தார்.
அதானி பங்குகள் 10 முதல் 20 சதவீதம் சரிவு… சென்செஸ் 584 புள்ளிகள் இறங்கியது…