பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் இருந்து புது டெல்லிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு புறப்பட்ட விமானம் புகைமூட்டம் காரணமாக ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டது.
ஏர் இந்தியாவின் AI-2022 என்ற இந்த விமானம் திங்கள்கிழமை காலை 10.35 மணிக்கு டெல்லியில் தரையிறங்க இருந்த நிலையில் காற்று மாசால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்டது.
விமானம் டெல்லிக்கு புறப்படுவதற்கான அனுமதிக்காக காத்திருந்த நிலையில், விமானிகள் தங்கள் பணி நேரத்தைக் காரணம் காட்டி தொடர்ந்து பறக்க மறுத்துவிட்டனர், இதன் விளைவாக பயணிகள் டெல்லிக்கு பேருந்தில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
விமான ஓட்டிகள் சோர்வு தொடர்பானவற்றில் இருந்து போதுமான ஓய்வு எடுக்க FDTL நேர வரம்பு விதிகள் பாதுகாக்கிறது.
டெல்லியின் மோசமான வானிலை விமான நிறுவனத்திற்கு புதியது அல்ல என்ற போதும் AI-2022 விமானத்தில் வந்த 180 க்கும் மேற்பட்ட பயணிகளை ஜெய்ப்பூரில் இருந்து டெல்லிக்கு பேருந்தில் அழைத்துச் செல்வதை தவிர வேறு எந்த மாற்று வழியையும் அது யோசிக்கவில்லை.
தவிர, குறைந்த பார்வை தூரத்தில் விமானத்தை இயக்க விமானிகளுக்கு போதுமான பயிற்சி அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள், விமான நிறுவனத்தின் நிர்வாகத் திறன் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக விமான நிறுவனம் இதுவரை எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடாததையும் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள் ஏர் இந்தியா விமானம் பரிதாபகரமான நிலையில் உள்ளதாக கடுமையாக விமர்சித்துள்ளனர்.