சென்னை: 68 பேரின் உயிரை காவு வாங்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது தமிழ்நாடு அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிவரும் என கூறி, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுவை விசாரணை செய்து வந்த உயர்நீதிமன்றம், தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. இந்த நிலையில், இன்று கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐ மாற்றி தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வு, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த நிலையில், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐ காவல்துறையிடம் ஒப்படைக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி 229 போ் உடல் நலம் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 68 போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…