சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு, சிறையில்  அடைக்கப்பட்டுள்ள   நடிகை கஸ்தூரி ஜாமின் மனுமீது இன்று சென்னை உயர்நிதிமன்றம் விசாரிக்க உள்ளது.

இதற்கிடையில், கஸ்தூரிக்கு ஜாமின் வழங்கப்பட்டால்,  அடுத்தடுத்த வழக்குகளில் கைது செய்ய காவல்துறை தயாராக உள்ளதாக   தகவல் வெளியாகியுள்ளது.

பிராமணர் உட்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் பி.சி.ஆர். எனப்படும் வன்கொடுமை தடுப்பு சட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி நவ.3-ம் தேதி இந்து மக்கள் கட்சி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில்,  கலந்துகொண்டு உரையாற்றி, திரைப்பட நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்து பேசியது சர்ச்சையானது. இதையடுத்து, அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரினார்.

ஆனால், இதை ஏற்காத சில தெலுங்கு அமைப்புகள்  கஸ்தூரி  மீது   புகார் அளித்தது.   புகாரின்பேரில், நடிகை கஸ்தூரியை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்மீது, எழும்பூர் போலீஸார் கஸ்தூரி மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்தனர்.

முன்னதாக, புகார் குறித்து விசாரணை நடத்த  அவருக்கு சம்மன் அளிக்க அவேரது வீட்டுக்கு  சென்றபோது அவரது வீடு மூடியிருந்தது. இதையடுத்து அவர் தலைமறைவானதாக தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். முன்னதாக முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து கஸ்தூரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், அவரது ஜாமின் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இன்றைய விசாரணையின்போது,     நடிகை கஸ்தூரி சார்பில் வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகரன் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் ஒருவேளை கஸ்தூரிக்கு ஜாமின் கிடைத்தால், அவரை அடுத்தடுத்த வழக்குகளில் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ஏற்கனவே கஸ்தூரி மீது  சென்னையை பொருத்தவரை கோயம்பேடு காவல்நிலையம், மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் உள்ளது. அதேபோல் மதுரை, கோவை, கும்பகோணம் என மொத்தம் 6 புகார்கள் அவர் மீது உள்ளன. இவ்வழக்கு தொடர்பாக அவரை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.