வாஷிங்டன்
டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று வரும் ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்க உள்ளார். டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போது, சட்டவிரோத குடியேற்றம் குறித்து அதிகம் பேசினார்.
மேலும் ஜோ பைடன் ஆட்சியில் சட்டவிரோதமாக அமெரிக்க எல்லைக்குள் புகுந்தவர்களை நாடு கடத்தி, மெக்ஸிகோவுடனான எல்லையை உறுதி செய்து நாட்டை பாதுகாப்பேன் என்று டொனால்டு டிரம்ப் உறுதி அளித்திருந்தார்.
டிரம்ப் தலைமையிலான ஆட்சியில் தேசிய அவசரநிலை கொண்டு வரப்பட்டு, ராணுவத்தை பயன்படுத்தி பெருமளவிலான புலம் பெயர்ந்தவர்களை நாடு கடத்தவுள்ளார் என்று ட்ரூத் சமூக ஊடகத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார்.
அதை டிரம்ப், உண்மை என்று ஒப்புக் கொண்டுள்ளார்.
தற்போது அமெரிக்காவில் சுமார் 1.1 கோடி மக்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. டொனால்ட் டிரம்பின் இந்த நாடு கடத்தலால் நேரடியாக 2 கோடி குடும்பங்கள் பாதிக்க்கப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.