டெல்லி
டெல்லியில் அபாயகரமான காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் டெல்லி இனியும் தலைநகராக இருக்க வேண்டுமா என சசி தரூர் வினா எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து டெல்லியில் காற்றின் தரம் கடுமையான பிரிவில் பதிவானதால் அடர்ந்த புகை மூட்டம் நிலவி இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் காற்று தரக் குறியீடு (AQI) 488 ஆக பதிவாகியுள்ளது. காற்றின் தரம் ‘கடுமையான’ பிரிவில் இருந்ததால், பல்வேறு பகுதியில் இன்று காலை புகை மண்டலம் போல காட்சியளித்தது.
டெல்லியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புக்கு மாறி வருகின்றன. இங்குள்ள மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் ஏற்படும் சுவாச பிரச்சினைகளுடன் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் நாடாளுமன்ற எம்.பி.யுமான சசி தரூர் தனது எக்ஸ் வலைதளத்தில்,
”உலகின் அதிக மாசுபட்ட நகரமாக டெல்லி அதிகாரப்பூர்வமாகவே மாறி உள்ளது. உலகின் இரண்டாவது அதிக மாசுபட்ட நகரமான டாக்கா [வங்காள தேசம் தலைநகர்] நகரை விட 4 மடங்கு அதிகமான நச்சு டெல்லி காற்றில் உள்ளது. பல ஆண்டுகளாக இந்த கொடுங்கனவை நாம் எதிர்கொண்டு வந்தாலும் நமது அரசு அது பற்றி ஏன் எதையும் செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
நானும் கடந்த 2015ம் ஆண்டு முதல் எம்.பி.க்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள், மாசு கட்டுப்பாட்டில் பங்குதாரர்களுக்கான காற்றின் தர வட்ட மேஜை கூட்டங்களை நடத்திவந்தேன், ஆனால் அதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை, எனவே கடந்த வருடம் அதைக் கைவிட்டுவிட்டேன். இந்த நகரம் நவம்பர் முதல் ஜனவரி வரை வசிக்கவே முடியாத நகரமாகிவிடுகிறது. ஆண்டின் மற்ற மாதங்களில் ஏதோ வாழலாம் என்றுதான் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், டெல்லி இனியும் நாட்டின் தலைநகராக இருக்க வேண்டுமா?”
என்று வினா எழுப்பி உள்ளார்