இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை தலைவிரித்தாடும் நிலையில், இதுதொடர்பாக விவாதிக்க மாநில பாஜக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளது.

மணிப்பூர் தொடர் வன்முறை குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு முதல்வர் பிரேன் சிங் அழைப்பு விடுத்துள்ளார். பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து வந்த மேகாலய முதல்வா் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி, மணிப்பூா் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளது. இந்த  நிலையில், பாஜக முதல்வர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார்.

இதற்கிடையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் , மணிப்பூர் வன்முறை இன்று உயர்நிலைக் கூட்டம்  நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மணிப்பூரில்  சட்டம் ஒழுங்கு தோல்வியைக் காரணம் காட்டி, பிரதமர்  மோடி எங்கே? அங்கு செல்வதற்கு அவருக்கு முகமில்லை’ என்று  கார்கே குற்றம் சாட்டி உள்ளார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. 2023ம் ஆண்டு  மே மாதம்  இரு சமூகத்தினரையே பெரும் கலவரம் மூண்டது. அதைத் தொடா்ந்து, இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இரு சமூகத்தினா் சாா்ந்த தீவிரவாதக் குழுக்களும்  மக்களை பகடைக்காயாக வைத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதல் காரணமாக இரு தரப்பிலும் சேர்த்த இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.

இந்த நிலையில், கடந்த வாரம்,  6 பேர்  மணிப்பூர்  தீவிரவாதிகளால்  கடத்திச் செல்லப்பட்ட நிலையில், அவர்கள் கொடூரமாக கொன்று வீசப்பட்டுள்ளது தெரிய வந்தது. இந்த சம்பவம் காரணமாக, அங்கு மீண்டும் போராட்டங்கள் தலைதூக்கி உள்ளது. இந்த சம்பவத்தில் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில்,   மணிப்பூா் மாநில  அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏ-க்களின் வீடுகள்மீது தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில், தலைநகர் இம்பாலில் இன்று மாலை 6 மணிக்கு அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படிக்க : மணிப்பூா் பாஜக அரசுக்கு ஆதரவு வாபஸ் கூட்டணிக் கட்சி திடீா் முடிவு பாஜக அரசுக்கு ஆதரவு வாபஸ்

60 இடங்களைக் கொண்ட மணிப்பூா் சட்டப்பேரவையில்   ஆளும் பாஜக 32 எம்எல்ஏ-க்களுடன் தனிப்பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. மேலும், பாஜகவுக்கு 7 எம்எல்ஏ-க்கள்  கொண்ட தேசிய மக்கள் கட்சி ஆதரவு அளித்து வந்தது. மேலும்,  நாகா மக்கள் முன்னணி (5), ஐக்கிய ஜனதா தளம் (6) கட்சிகளின் ஆதரவும் பாஜகவுக்கு இருப்பதால் ஆட்சிக்கு பாதிப்பில்லை. எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கு 5 எம்எல்ஏ-க்களும், 3 சுயேச்சை எம்எல்ஏ-க்களும் உள்ளனா்.