டெல்லியில் அக்டோபர் மாதம் முதல் காற்றின் தரம் குறைந்து வருவதாகவும் இதைக் கட்டுப்படுத்த பாஜக தலைமையிலான மத்திய அரசு எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று டெல்லி முதல்வர் அதிஷி குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும் அபாயகரமான காற்றின் தரம் காரணமாக வட இந்தியா மருத்துவ அவசரநிலையை எதிர்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மக்கள் சுவாசிக்கக் கூட முடியாமல் திணறி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் விவசாய நிலங்களில் பயிர்களை எரிப்பது தடை செய்யப்பட்டு சுமார் 80 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் மத்திய அரசு இதனை மற்ற மாநிலங்களில் அமல்படுத்த தேவையான முயற்சியை மேற்கொள்ளவில்லை மற்றும் மாசு கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த வேறு எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
கடந்த 6-7 ஆண்டுகளாக அதிகரித்து வரும் காற்று மாசு பிரச்சனைக்கு மத்திய அரசு இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன என்பதை தெளிவுபடுத்த முடியுமா ? என்றும் கேள்வி எழுப்பினார்.
பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பொதுவாகக் காணப்படும் பட்டாசுகள் மற்றும் வயல்வெளிகளில் பயிர்களை எரித்தல் போன்ற பல காரணிகளால் டெல்லியின் காற்றின் தரம் அக்டோபர் மாத இறுதியில் இருந்து குறைந்து வருகிறது.
டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதைக் கண்டித்து உச்ச நீதிமன்றம் டெல்லி அரசைக் கண்டித்துள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அதிஷி டெல்லி காற்று மாசுபட்டு விவகாரத்தில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.