மங்களூரின் புறநகரான உல்லால் பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி மூன்று மாணவிகள் உயிரிழந்த விவகாரத்தில் விடுதி உரிமையாளர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மைசூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகளான இந்த மூவரும் வார இறுதி விடுமுறையை கழிக்க உல்லால் பகுதியில் உள்ள ரிசார்ட்டுக்கு கடந்த சனிக்கிழமை சென்றுள்ளனர்.

நேற்று அவர்கள் நீச்சல் குளத்தில் இறங்க நினைத்தனர் இதில் நீச்சல் தெரியாத நிஷிதா (21) என்ற மாணவி நீச்சல் குளத்தில் தண்ணீரில் மூழ்கியதை அடுத்து அவரைக் காப்பாற்ற பார்வதி (20) என்ற மாணவி முயற்சி செய்த நிலையில் அவரும் நீரில் மூழ்கினார்.

இவர்கள் இருவரையும் காப்பாற்ற சென்ற கீர்த்தனா (21) என்ற மாணவியும் இதில் நீரில் மூழ்கினார்.

மாணவிகள் மூன்று பேர் உயிரிழந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நீச்சல் குளத்தில் அதன் ஆழம் மற்றும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாத அந்த ரிசார்டின் உரிமையாளர் மற்றும் மேலாளர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், நீச்சல் குளத்தில் மூழ்கிய மாணவிகள் அனைவரும் காப்பாற்ற வேண்டி அபயக்குரல் எழுப்பியும் அந்த ரிசார்ட்டில் அப்போது பணியில் இருந்து ஏழு பேரில் ஒருவர் கூட அவர்களை காப்பாற்ற முயற்சி செய்யதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.