புதுக்கோட்டை : தமிழ்நாட்டில் சர்வாதிகாரிகளுக்கு (சீமான்) ஒருபோதும் இடம் இல்லை என கூறிய தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி, நடிகர் விஜய்யும் தேர்தலில் தோல்வியையே சந்திப்பார் என ஆரூடம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியளார்கள் அரசியல் தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும் தேர்தல் கூட்டணி மாற வாய்ப்பு இருக்கிறதா என்றும் கேட்டனர்.

இதற்கு பதில் கூறிய அமைச்சர் ரகுபதி, யாரும் யாரோடு கூட்டணி சேர்ந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் கூட்டணி ஸ்ட்ராங்காக இருக்கிறது. நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார்.

சீமான் தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர், தமிழ்நாட்டில் சர்வாதிகாரிகளுக்கு (சீமான்) ஒருபோதும் இடம் இல்லை; அப்படி யாரேனும் சொன்னால் அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார்.

விஜயின் அரசியல் பயணம், கூட்டணி பேச்சு தொடர்பான எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர், நடிகர் விஜய் எம்ஜிஆர் பாணியை பின்பற்றப் பார்க்கிறார்; அது ஒருபோதும் நடக்காது; எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது என்றவர்,

திமுக மீது விஜய் வைத்துள்ள குற்றச்சாட்டு பிசுபிசுத்துப் போகும். அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் தோல்வியைத்தான் சந்திப்பார் என்றார்.

அண்ணாமலை மேற்படிப்பை முடித்து விட்டு திரும்பி வருகிறாரே,. அதன்பிறகு அரசியல் களத்தில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு, அண்ணாமலை லண்டனில் இருந்து திரும்பி வந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

ஏற்கனவே ஊழல் பட்டியலை எல்லாம் அண்ணாமலை கொடுத்திருந்தார் அது புஷ்வானமாகிவிட்டது.

அதைப்போல் தவெக தயாரிக்கும் ஊழல் பட்டியலால் எந்தவித பலனும் பயனும் கிடைக்கப்போவதில்லை.

2024 தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க முடியாமல் போனதை போல, சட்டப்பேரவைத் தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமியால் கூட்டணி அமைக்க முடியாது,”என்று தெரிவித்தார்.

இதனிடையே நெல்லையில் நேற்று கட்சி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக பேசிய சீமான், ஒரு நேர்மையாளர் சர்வாதிகாரியாகத் தான் இருக்க முடியும். சர்வாதிகாரம் இல்லாது எந்த செயலையும் சரி செய்ய முடியாது எனப்பேசியிருந்தார். சீமானை மறைமுகமாக குறிப்பிட்ட ரகுபதி, சர்வாதிகாரிகளுக்கு இடமில்லை என்று விமர்சித்துள்ளார்.