அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் 15ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ள தைவான் நிறுவனத்தின் காலணி தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
களஆய்வு பணிக்காக இன்று அரியலூரில் முகாமிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் அங்கு பல்வேறு அரசு மற்றும் கட்சி பணிகளை மேற்கொள்கிறார்.
இன்று காலை ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகே அமைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, ஜெயங்கொண்டம் பகுதியில் மகிமைபுரத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் 130 ஏக்கரில் புதிய 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்,
தைவான் நாட்டைச் சேர்ந்த டீன் ஷூஸ் குழுமம் காலணி உற்பத்தி தொழிற்சாலை அமைக்க உள்ளது. இதற்கா சுமார் 130 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இங்கு ரூ.1,000 கோடி முதலீட்டில் புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலை அமைய உள்ளது. இதற்காக அடிக்கல் நாட்டும் பணி இன்று நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். இந்த தொழிற்சாலை மூலம் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உடன் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் டீன் ஷூ நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டனர்.